நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி திட்டம் துவக்கம்: கடலுார் மாவட்டத்தில் 520 பள்ளிகளில் அறிமுகம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி' திட்டம் கடந்த 18 ம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. அதையொட்டி கல்வியில் முன்னேற்றம் அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவின்போது தேர்ச்சி சதவீதம் குறைவாகாமல் இருக்க காரணத்தை கண்டறியுமாறு கல்வித்துறை உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10 ம் தேதி தமிழ், ஆங்கிலம், கணிதம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 7 மார்க்குகள் கீழ் வாங்கும் மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவர்கள் 'ஸ்லோ லேணர்ஸ்' என்று அழைக்கப்பட்டனர். அவர்களை தனியாக அழைத்து ஒரு அறையில் பிரத்யேகமாக பாடம் கற்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அரசு 'நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி' திட்டம் என பெயரிட்டது. அதாவது ஒன்னரை மணி நேரம் பாடம், மீதி விளையாட்டு என மாணவ மாணவியர்களை அவர்கள் போக்கிற்கு ஊக்கமளித்து பாடம் கற்பிக்கப்படும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியிலும் 10, 15, 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடலுார் வட்டாரத்தில் மட்டும் 720 மாணவ மாணவியர்கள் தேர்வு (7 மார்க்கு கீழ் வாங்கியவர்கள்) செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தனி அறையில் தனி ஆசிரியரைக்கொண்டு கற்றுக்கொடுக்கப்படும். பாடத்திட்டம் எந்த அளவு புரிகிறது என்பதை அவ்வப்போது, சோதனை தேர்வு செய்து பார்க்க வேண்டும். அதற்காக தனியாக கேள்வித்தாள் தயாரித்து தேர்வு நடத்த வேண்டும். இது தவிர திறன்மேம்பாடு என்பதை வெளிக்கொணரும் விதமாக மாணவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று அதன் மூலம் அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க செய்து வருகின்றனர். இரண்டு மாதம் ஒரு முறை நடைபெறும் தேர்வில் கூடுதல் மார்க்குகள் பெற்றால் அந்த மாணவர்கள் அந்த திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மற்ற மாணவர்கள் உடன் உட்கார்ந்து பாடம் கேட்கலாம். கடலுார் மாவட்டத்தை பொறுத்தவரை 520 பள்ளிகளில் இந்த நடுவில் கொஞ்சம் கற்றலைத்தேடி திட்டம் 18 ம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது.