உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிலம்பத்தில் பதக்கங்களை குவிக்கும் வீராங்கனை

சிலம்பத்தில் பதக்கங்களை குவிக்கும் வீராங்கனை

கடலுார்: கடலுார் துறைமுகம், அக்கரைகோரியை சேர்ந்தவர் சாதனா,11; துறைமுகம் புனித பிலோமினாள் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். இவர், முய்தாய் (குத்துசண்டை) மற்றும் சிலம்பம் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகிறார்.குறிப்பாக, கடலுாரில் 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றியும், கண்ணை கட்டிக் கொண்டு ஒன்னரை மணி நேரம் சிலம்பம் சுற்றியும் சாதனை படைத்துள்ளார். வேலுாரில் மாநில அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் ஒரு நிமிடத்தில் 169 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக உலக சாதனை விருது 6 முறையும், இளம் சாதனையாளர் விருது 3 முறையும், சிறந்த சிலம்பாட்ட வீராங்கனை விருது 3 முறையும் பெற்றுள்ளார். தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 6 முறை முதலிடம், மாநில அளவிலான போட்டியில் 10 முறை முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மாவட்ட அளவில் 11 முறை வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார். சென்னையில் மாநில அளவில் நடந்த முய்தாய் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மாணவிக்கு தந்தை தனசேகரன், தாய் கோமதி, பயிற்சியாளர் கணேசன் ஊக்கமளித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவி சாதனா கூறுகையில், 'சிறு வயதில் இருந்தே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது. இதற்காக முய்தாய் மற்றும் சிலம்பாட்டத்தை தேர்வு செய்து, கடலுார் முதுநகர் தாஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சேர்ந்து கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இந்திய அணி சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே லட்சியம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ