கர்ப்பிணியிடம் 3 சவரன் தாலி செயின் திருட்டு விருதை அரசு மருத்துவமனையில் துணிகரம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணியின் 3 சவரன் தாலிச்செயின் திருடுபோனது, அரசு மருத்துவமனையில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம் அமுதன் மனைவி புனிதவதி, 34. நிறைமாத கர்ப்பிணியான இவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவ அறைக்கு செல்லும்போது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தாலிச்செயினை படுக்கையில் கழட்டி வைத்துவிட்டு, மஞ்சள் கயறுடன் சென்றிருந்தார். அப்போது, மூக்குத்தியை கழட்டுமாறு மருத்துவ ஊழியர்கள் கூறியதால், திரும்ப வந்து மூக்குத்தியை கழட்டி வைக்க வந்தார். ஆனால், புனிதவதி ஏற்கனவே கழட்டி வைத்திருந்த 3 சவரன் தங்கச்செயினை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் சி.சி.டி.வி., கேமரா இல்லாததால், செயினை திருடிச் சென்ற நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்ற சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் கர்ப்பிணியின் 2.75 லட்சம் மதிப்பிலான 3 சவரன் தாலிச்செயின் திருடுபோன சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.