போதையில் தரை கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
ராமநத்தம்: ராமநத்தம் அருகே குடிபோதையில் தரைக்கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் இறந்தார். கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வாகையூரைச் சேர்ந்தவர் ராவணன் மகன் சக்திவேல், 28; இவர் நேற்று மாலை 5:00 மணி தனது நண்பர்கள் வினோத், ரமேஷ் ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள பன்னீர் என்பவரது தரை கிணறு அருகே மது அருந்தினர். பின்னர் கிணற்றில் மூவரும் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த வினோத், ரமேஷ் இருவரும் கூச்சலிட்டனர். அருகிருந்தவர்கள் கிணற்றில் குதித்து சக்திவேலை தேடினர். பின்னர், ராமநத்தம் போலீசார் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி மாலை 6:00 மணிக்கு, சக்திவேலை சடலமாக மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.