ரவுண்டானாவில் விதிமீறும் வாகனங்களால் விபத்து... அபாயம்; விருதை - பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலையில் அச்சம்
விருத்தாசலம்: விருத்தாசலம் கோ.பொன்னேரி ரவுண்டானாவில் விதிமீறும் வாகனங்களால்விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாவிட்டது. விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., அருகில் இருந்து வேப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மணவாளநல்லுார் ஊராட்சி எல்லை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இவ்வழியாக திருச்சி, கடலுார், சேலம் மார்க்க கனரக வாகனங்கள் செல்கின்றன. இதற்காக, கோ.பொன்னேரி, சித்தலுார் பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டது.அதில், கோ.பொன்னேரி ரவுண்டானா வழியாக கம்மாபுரம், சேத்தியாதோப்பு, புவனகிரி, சிதம்பரம், பூம்புகார் மார்க்கமாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், போதிய எச்சரிக்கை பலகைகள் இல்லாமல், வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கின. இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, அப்போதைய எஸ்.பி. ராதிகா உத்தரவின்படி, தற்காலிகமாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.அதன்பின், விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியால், கோ.பொன்னேரி ரவுண்டானா விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக, நான்கு புறமும் ஐலேண்ட் வடிவில் சிமென்ட் தடுப்புகள் அமைத்து, நகருக்கு உள்ளேயும் வெளியேயும் எளிதில் செல்லும் வகையில் பாதை உருவாக்கப்பட்டது. மேலும், ரவுண்டானா நடுவில் ைஹமாஸ் விளக்கும் அமைக்கப்பட்டது.மேலும், கடலுார் மார்க்கத்தில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., அருகே 37 கோடி ரூபாயில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில், சேலம் புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்லும்போது ரவுண்டானாவை கடக்க முடியாமல் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும், ரவுண்டானாவை கடக்கும் வாகனங்கள் விதிமீறி, ைஹமாஸ் விளக்கு கம்பத்தை சுற்றி செல்லாமல், குறுக்கே நுழைந்து, சாலையை கடக்கும்போது எதிரெதிர் திசைகளில் வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. கடந்தாண்டு ரவுண்டானாவை வேகமாக கடந்த தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதி, 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.எனவே, விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோ.பொன்னேரி ரவுண்டானாவில் விழிப்புணர்வு பலகைகள் பொறுத்தி, வாகன ஓட்டிகளை எச்சரித்து விபத்து அபாயத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேனர்கள் அதிகரிப்பு
கடந்த சில மாதங்களாக ரவுண்டானாவின் நான்கு திசைகளிலும் அரசியல் கட்சிகள், தனியார் திருமண விழாக்களுக்கு பேனர்கள் கட்டுவது அதிகரித்துள்ளது. சாலையோரம் உள்ள இரும்பு தடுப்புகளில் பேனர்களை கட்டுவதால் வாகன ஓட்டிகளின் கவனம் திசைமாறி, விபத்து ஏற்படுவது தொடர்கிறது. எனவே, ரவுண்டானாவில் பேனர் கட்டுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.