மேலும் செய்திகள்
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்
16-Oct-2025
விருத்தாசலம்: பருவமழை காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கி உள்ளது. வேளாண் அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்க வாய்ப்புள்ளது. இதனால், மண்ணில் உள்ள சத்துக்களை பயிர்கள் எடுத்துக்கொள்ள முடியாமல் பயிர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீர் தேங்கிய நெல் வயல்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி, தேங்கி நிற்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும். முதிர்வடையாத பயிர்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 18 கிலோ ஜிப்சம், 17 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். தொடர்ந்து மழைநீர் தேங்கியிருந்தால், நுண்ணுாட்ட சத்து குறைபாடு ஏற்படும். அதனை தடுக்க ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் 2 கிலோ யூரியா, 1 கிலோ சிங்க் சல்பேட், 150 கிராம் காப்பர் சல்பேட், 100 கிராம் போரக்ஸ் கலந்து இலை வழியாக தெளிக்க வேண்டும். மழைக்கால நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் வராமல் தடுக்க, காப்பர் ஹைட்ராக்சைடு 2 கிராம், 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். வெப்பம் குறையும் போது, இலை சுருட்டு புழு தாக்குதல் வர அதிகம் வாய்ப்புள்ளது. அதனை தடுக்க குளோரான்டிரனிலிப்ரோல் மருந்தை ஏக்கருக்கு 60 மில்லி லிட்டர் எடுத்து 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல், காய்கறி, மலர்கள், பருத்தி, மக்காசோளம், மஞ்சள், ஆகிய பயிர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16-Oct-2025