திருவிழாவில் செயின் பறிப்பு அம்பாசமுத்திரம் பெண் கைது
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் கோவில் திருவிழாவில் 3 பேரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை குமரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 15ம் தேதி நடந்தது. விழாவிற்கு சென்றிருந்த பரங்கிப்பேட்டையை சேர்ந்த சந்திரா,70, என்பவரிடமிருந்து இரண்டு சவரன் தங்க செயின், பட்டம்மாள்,50, என்பவரிடமிருந்து ஒன்றரை சவரன் செயின், அமுதா,47, என்பவரிடமிருந்து இரண்டு சவரன் தங்க செயினை கூட்டத்தில் மர்ம நபர் பறித்துச்சென்றார்.பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த வெள்ளங்குளியை சேர்ந்த இசக்கியம்மாள்,45, என்பவர் நகைகளை பறித்தது தெரியவந்தது. அதையடுத்து, இசக்கியம்மாளை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.