உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலை., போலி சான்றிதழ்கள் வைத்திருந்த புவனகிரி பட்டதாரி கைது

அண்ணாமலை பல்கலை., போலி சான்றிதழ்கள் வைத்திருந்த புவனகிரி பட்டதாரி கைது

கடலுார்: வடலுாரில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சான்றிதழ்கள் வைத்திருந்த இன்ஜினியரிங் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், வடலுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை, வடலுார் சேத்தியாதோப்பு மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் வெவ்வேறு பெயர்களில் இருந்தன.சந்தேகமடைந்த போலீசார், சான்றிதழ்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அவை போலியானவை என தெரிந்தது.விசாரணையில் அந்த வாலிபர், புவனகிரி அடுத்த கீழ மணக்குடியை சேர்ந்த மதியழகன் மகன் இளம்வழுதி, 37, பொறியியல் முதுகலை பட்டதாரி என தெரிய வந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, இளம்வழுதியை கைது செய்தனர்.தீவிர விசாரணையில், வடலுாரில் கன்சல்டன்சி நடத்தி வந்த விக்னேஷ்,27, என்பவருடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளளார். ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர், இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்றுள்ளனர். இவர்களுக்கு உதவியாக இருந்த அண்ணாமலை பல்கலை கழக செக்யூரிட்டி ஒருவர் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார் என தெரிய வந்தது. .விக்னேஷ், குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இவ்வழக்கில் யார், யாருக்கு தொடர்புள்ளது, போலி சான்றிதழ்கள் யாருக்கு விற்கப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் சர்ச்சை

கடந்தாண்டு ஜூன் மாதம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி சாலையில் போலி சான்றிதழ்கள் மூட்டை, மூட்டையாக கைப்பற்றப்பட்டது. பல்வேறு பல்கலைக் கழகங்களின் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக, சிதம்பரத்தைச் சேர்ந்த சங்கர், மீதிகுடியைச் சேர்ந்த நாகப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதில் மூளையாக செயல்பட்ட கவுதமன் தலைமறைவான நிலையில், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. தற்போது, போலி சான்றிதழ் வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் பல்கலைக் கழக ஊழியருக்கும் தொடர்பு இருந்துள்ளது. எனவே போலி சான்றிதழ் தயாரிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி