குழந்தைகள் இறப்பு சதவீதத்தை குறைக்க ஏற்பாடு; மாவட்டத்தில் 16ம் தேதி சிறப்பு முகாம் துவக்கம்
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறப்பதை தடுக்க தீவிர தடுப்பு முகாம் வரும் 16ம் தேதி தேதி 31ம் தேதி வரை நடக்கிறது.நாட்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவீதத்தில் 10 சதவீதம் பேர் வயிற்றுப்போக்கு காரணமாக இறக்கின்றனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறப்பு இல்லை என்ற நிலை கொண்டு வருவதே முகாமின் நோக்கம் ஆகும். முகாமில் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1,62,764 பேர் பயனடைய உள்ளனர். இவர்களுக்கு தேவையான ஓ.ஆர்.எஸ்., துத்தநாக மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. இத்திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று 2 ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு வழங்க உள்ளனர். மேலும், தாய்ப்பால் கொடுத்தல், இணை உணவு வழங்குதல், கை கழுவுதலின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்க உள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எடை எடுக்கப்பட்டு சத்து குறைவான குழந்தைகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்வார்கள். வயிற்றுப்போக்கு பாதிப்பு இருந்தால் உடனே ஊழியர்கள் சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வார்கள்.தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், 'வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்பால் கொடுக்க வேண்டும். கூடுதலாக திரவ ஆகாரங்கள் கொடுக்க வேண்டும். தொடர்ந்து துத்தநாக மாத்திரைகளை 14 நாட்களுக்கு (வயிற்றுப்போக்கு நின்றுவிட்டாலும்) கொடுக்க வேண்டும். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படுவது குறையும். நீர் இழப்பு நிலை ஏற்படுவது தடுக்கப்படும், வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்றவை 2 முதல் 3 மாதங்கள் வரை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்தால், குழந்தைகள் தாய்பாலோ, திரவமோ குடிக்க முடியாத நிலை ஏற்படும். குழந்தைகளின் மலத்தில் ரத்தம் காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும்' என்றார்.