நலவாரியத்தில் உறுப்பினராக நலிவுற்ற பெண்களுக்கு அழைப்பு
கடலுார் : தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள், நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்கள் ஆகியோர் அரசின் நலத்திட்ட உதவிகளில் முன்னுரிமை பெறுவதற்கு கைம்பெண்கள் நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்கள் (www.tnwidowwelfareboard.tn.gov.in) என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். கடலுார், அண்ணாகிராமம், பண்ருட்டி ஒன்றியங்களில் வரும் 2ம் தேதியும், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஒன்றியங்களில் 3ம் தேதியும், கீரப்பாளையம், மேல்புவனகிரி, பரங்கிபேட்டை ஒன்றியங்களில் 4ம் தேதியும், விருத்தாசலம், கம்மாபுரம், நல்லுார், மங்களூர், ஒன்றியங்களில் 5ம் தேதியும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.