சிதம்பரம் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு அதிரடி மாற்றம்
சிதம்பரம்; சிதம்பரத்தில் பிரபல லாட்டரி வியாபாரிக்கு ஆதரவாக இருந்ததாக எழுந்த புகாரில், டி.எஸ்.பி., உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி ஒருவரை அண்ணாமலை நகர் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனைக்கு, உட்கோட்ட உயர் அதிகாரி மற்றும் போலீசார் தனக்கு உதவி செய்வதாக வியாபாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலுார் எஸ்.பி., ஜெயக்குமாருக்கு புகார் சென்ற நிலையில், அவர் விசாரணை நடத்தி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆகியோருக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து, காவல் துறையின் சிறப்பு தனிப்படையினர் கடந்த ஐந்து நாட்களாக சிதம்பரத்தில் முகாமிட்டு ரகசிய விசாரணை நடத்தினர். அதில், லாட்டரி வியாபாரிக்கு போலீசார் உதவியது தெரியவந்தது. அதையடுத்து, சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு ,சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீசார் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு போலீஸ்காரர் கார்த்திக் ஆகிய 7 பேர், வேலூர் மாவட்டத்திற்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.