புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு கூட்டணி கட்சிகள்... எதிர்ப்பு ; போக்குவரத்துக் கழக இடத்தில் விரிவாக்கம் செய்யலாம்
கடலுார்: கடலுாருக்கான புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் அமைப்பதற்கு ஆளும் கூட்டணி கட்சிகள்மற்றும் நகர்நலச்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.கடலுார் நகரம், புதுச்சேரி மாநிலத்தை யொட்டி அமைந்துள்ளதால் சராசரியாக தினமும் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்திற்குள் நாளொன்றுக்கு 650 பஸ்கள் வருகின்றன. பஸ் நிலையம் அருகே வணிக நிறுவனங்கள், ரயில்நிலையம் அருகருகே அமைந்திருப்பதால் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் கடினமாகவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தை ஏற்கனவே செம்மண்டலம் பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையத்தை அமைக்க இடம் வகைமாற்றம் செய்யப்பட்டது. அதன்படி கட்டுமான பணிக்குபூமி பூஜைபோட்டதோடு சரி, அத்துடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது. மழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து பெண்ணையாற்றில் புரளும் தண்ணீரால் பஸ் நிலையம் பாதிக்கப்படும் என நிறுத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்திற்காக கடலுாரில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள கேப்பர் மலையில் எம்.புதுார் என்ற இடத்தில்(அதாவது குறிஞ்சிப்பாடி தொகுதியில்) பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையறிந்த அரசியல் கட்சிகள் மற்றும் நகர்நலச்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. பஸ் நிலையத்திற்கு இடம் பற்றாக்குறை என்றால் அருகில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அந்த இடத்தை பஸ் நிலையத்திற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.எல்லா ஊர்களிலும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள், பஸ் நிலையத்தில் இருந்து வெகு துாரத்தில் உள்ளன. அதைவிட்டுவிட்டு தொலைநோக்கு பார்வையோடு செய்வதாக கூறி 7 கி.மீ., துாரத்தை மக்கள் ஆட்டோ போன்ற வாகனத்தி்ல் செலவழித்து வர வேண்டிய நிலை உள்ளது. வளர்ந்து வரும் நகரத்திற்கு இது சரியான தீர்வாக அமையாது என்கின்றனர் எதிர்பாளர்கள். கடந்த ஆண்டு பஸ் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டபோது, அ.தி.மு.க., தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பஸ் நிலையப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே பாதிரிக்குப்பம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடத்திற்கான உரிய பிரேரணை அனுப்புமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டதோடு சரி. அத்துடன் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் பஸ் நிலையத்தை சுற்றி சொந்தமாக இடம் வாங்கி வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பஸ் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதை கண்டித்து தி.மு.க., வின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி, மா.கம்யூ., இ.கம்யூ., ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, நகர்நலச்சங்கங்கள் , பொது நல அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கடந்த 27 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் மறுநாள் போராட்டம் நடத்தின. இவ்வாறு அனைத்து மக்களுமே போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை கைவிட வேண்டும் என்பதுதான் கடலுார் மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.