உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மானியத்தில் காய்கறி விதை, பழச்செடிகள்   விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

மானியத்தில் காய்கறி விதை, பழச்செடிகள்   விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

கடலுார்: வேளாண்மைத் துறையின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் காய்கறி விதைகள், பழச்செடிகள் வழங்கப்படுகிறது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வேளாண்மைத் துறை பட்ஜெட் அறிவிப்பில் அமைச்சர் பன்னீர்செல்வம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவிப்பு செய்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், இன்று (4ம் தேதி) சென்னையில் துவக்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம் மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், ஊட்டச்சத்து மிக்க நஞ்சு இல்லாத காய்கறிகள் கிடைப்பதையும் உறுதி செய்கிறது. இதனையொட்டி கடலுார் மாவட்ட விவசாயிகளுக்கு தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை போன்ற 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைக்கேற்ப மாவட்டத்தில் உற்பத்தி பரப்பு அதிகரித்து, முக்கிய காய்கறி பயிர்களின் பரப்பு விரிவாக்கம் செய்யப்படும். பயறு பெருக்கு திட்டத்தில் புரதச் சத்து நிறைந்த மரத்துவரை, காரமணி, அவரை போன்ற பயறு வகை விதைகள் அடங்கிய தொகுப்பு 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். விவசாயிகள் காய்கனிகளை நேரடியாக விற்பனை செய்யும் வண்டிகள் மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து மிகுந்த காளாண் உற்பத்தியை பெருக்க காளான் உற்பத்தி கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலரை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ