தேசிய வாக்காளர் தினம் கொண்டாட அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் சி பி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.இது தொடர்பாக கலெக்டர் தெரிவிக்கையில், இந்நிய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினமான ஜனவரி 25-ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக அனுசரித்திடவும், வாக்களிப்பது குறித்த உறுமொழியினை ஏற்க செய்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.அதனடிப்படையில் 15வது தேசிய வாக்காளர் தினம் 25.01.2025 அன்று கடைபிடிக்கப்படவுள்ளது. தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் தங்களது தொகுதிகளுக்குரிய அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் ஓட்டுச்சாவடி மைய அலவலர்களால் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்படி விழாவில் இளம் வாக்காளர்களை விழாவிற்கு அழைத்து பாராட்ட வேண்டும். அவர்களுக்கான புகைப்படத்துடன்கூடிய புதிய தேர்தல் அடையாள அட்டையினை வழங்கிட வேண்டும். தேர்தலின் போது, தபால் வாக்கு, ஓட்டுச்சாவடிகளில் உறுதிப்படுத்தப்பட்டவேண்டும், குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட், வாக்காளர் உதவிசெயலி, நியாயமான முறையில் வாக்களித்தல் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.மேலும், அது தொடர்பான வீடியோக்கள், குறும்படங்கள் ஆகியவற்றினை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விழாவினை சிறப்பான முறையில் கொண்டாடிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார். பயிற்சி கலெக்டர் ஆகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், தேர்தல் வட்டாட்சியர் சுரேஷ் குமார், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.