பலா மதிப்புக்கூட்டு மையம் கட்டுமான பணி மீண்டும் துவக்கம்
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம், பட்டீஸ்வரத்தில் பலாப்பழம் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கியது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி, பட்டீஸ்வரம் கிராமத்தில் கடந்த பிப்., மாதம் 16 கோடி ரூபாய் மதிப்பில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் பலா மதிப்புக்கூட்டு மைய கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வந்தனர். இதனால் அங்கு பலா மதிப்புக் கூட்டு மையம் கட்டக்கூடாது என தனி நபர் ஒருவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதனால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியை சுற்றி நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பலா மரங்கள் வளர்க்கப்பட்டு, விவசாயம் செய்யப்பட்டு வருவதாகவும், எனவே, பலாப்பழம் மதிப்பு கூட்டு மைய கட்டுமான பணியை மீண்டும் துவங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தெடார்ந்து, கட்டுமான பணிக்கு விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட் நீக்கியது. இதன் காரணமாக பலா மதிப்புக்கூட்டு மைய கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கி நடந்து வருகிறது.