தேர்தல் கட்டமைப்பை வலுப்படுத்த அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
கடலுார் : கடலுாரில் அரசியல் கட்சியினருடன், தேர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துதல் குறித்த அரசியல் கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் வாக்காளர் வாக்குப் பதிவு விதி முறைகள், தேர்தல் நடத்தை விதிகள், கோர்ட் உத்தரவுகள், தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்கள் குறித்து அரசியல் கட்சியினரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர்களாக சேர்க்க வேண்டும். ஓட்டுச்சாவடிகள் 2 கி.மீ தொலைவுக்குள் இருக்க வேண்டும். 800 முதல் 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.