தலையில் பிளாஸ்டிக் கொம்புகளுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
கடலுார்: கடலுார் மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நுாதன முறையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாநகராட்சி சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை கலெக்டர் உத்தரவின்பேரில், மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வருகின்றனர்.இருப்பினும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது. கடலுார் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று அ.தி.மு.க., மாநகராட்சி கவுன்சிலர் பரணி முருகன் தலைமையில் பொதுமக்கள் தலையில் நுாதன முறையில் பிளாஸ்டிக் கொம்புகளை வைத்துக் கொண்டு வந்தனர்.பின், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாநகராட்சி கமிஷனர் அனு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, '32வது வார்டில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாடுகள் முட்டி காயமடைகின்றனர். எனவே, சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென' பொது மக்கள் மனு அளித்தனர். மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் கூறினார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.