உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி - அகரம் சீகூர் பாலம் கட்டும் பணி மந்தம் : விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திட்டக்குடி - அகரம் சீகூர் பாலம் கட்டும் பணி மந்தம் : விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திட்டக்குடி : திட்டக்குடி - அகரம் சீகூர் இடையே வெள் ளாற்றின் மீது கட்டப்படும் உயர் மட்ட பாலம் பணி மந்தமாக நடப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடிவடையாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடலூர் மற்றும் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மாவட்ட எல்லைகளான திட்டக்குடி - அகரம் சீகூர் இடையே வெள்ளாற்றின் மீது தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாகத்தான் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், நூற்றுக் கணக்கான வாகனங்கள் திட்டக்குடிக்கு வந்துதான் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

அதுமட்டுமின்றி அவசர சிகிச்சைகளுக்கு கூட திட்டக்குடி வழியாக வந்து திருச்சி, பெரம்பலூர் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். இந்நிலையில் மழைக் காலங்களில் வெள்ளாற்றில் தரைப் பாலத்தின் மீது தண்ணீர் செல்லும்போது போக்குவரத்து முற்றிலும் தடைபடும். இதனால் மழைக் காலங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் லப்பைகுடிகாடு, ஒகளூர், தொழுதூர் வழியாக 30 கி.மீ., சுற்றி வரவேண்டும். அதேப்போன்று திட்டக்குடியில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் தினமும் இவ்வழியாகத் தான் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

இரு மாவட்ட மக்களுக்கும் பயன் தரும் வகையில் திட்டக்குடி - அகரம் சீகூர் இடையே வெள்ளாற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்ட வேண்டுமென இரு மாவட்ட மக்களும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் திட்டக்குடி - அகரம் சீகூர் வெள்ளாற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு 7.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதே ஆண்டு நவம்பர் 27ம் தேதி உயர் மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் துவங்கின. பணிகளை சென்னை பாரத் இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் செய்து வருகிறது. பணிகள் அனைத்தும் நேற்றோடு (26ம் தேதி) செய்து முடித்திருக்க வேண்டும்.

ஆனால் திடீர் மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணி அவ்வப்போது தடைபட்டு வந்தது. பாலம் கட்டும் பணி மந்தமாக நடந்து வருவதால் இதுவரை பாதியளவு பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முடிவடைய ஆறு மாதத்திற்கு மேலாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வரும் மழை காலத்தில் ஆற்றில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டால் போக்குவரத்து தடைபடுவதுடன், பாலம் கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்படும். நெடுஞ்சாலைத் துறை இனியும் கட்டுமானப் பணியை ஜவ்வாக இழுக்காமல் விரைந்து முடித்து பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ