நிலுவை வரிகள் வசூலிக்க கடப்பாரை ; கடலுார் மாநகர ஊழியர்கள் அடாவடி
கடலுார்; கடலுார் மாநகராட்சியில் நிலுவை சொத்து வரியை வசூலிக்க, கடப்பாரையுடன் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டின் வாசலில் நின்று அடாவடியில் இறங்கி இருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நகராட்சியாக இருந்த கடலுாரை, மாநகராட்சியாக 2021ம் ஆண்டு தரம் உயர்த்தி அரசு அறிவித்தது. இதனால், மாநகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கு முன்பு அ.தி.மு.க., ஆட்சியில் வரி வசூலில் ஆர்வம் காட்டாமல் நாட்களை நகர்த்தி விட்டனர். மாநகராட்சியாக அறிவித்த பின்னர் சொத்துவரி, கடை வாடகையை பல மடங்கு உயர்த்தி, அதை அப்போதே கூறாமல் இரண்டு ஆண்டுகள் முன்பிருந்து வாடகை உயர்வை செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. இதனால் பெரும்பாலானோருக்கு வாடகை மற்றும் சொத்து வரியில் நிலுவை விழுந்தது.இந்நிலையில் நிலுவை வரியை வசூலிக்க மாநகராட்சி தீவிரம் காட்டியது. சில மாதங்களுக்கு முன், செம்மண்டலம் அருகே சொத்து வரி நிலுவையில் இருந்த வீட்டின் முன், பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி வெளியே வர விடாமல் செய்தது. அதைத் தொடர்ந்து ஆல்பேட்டையில் ஒரு வீட்டின் படிக்கட்டை கடப்பாரையால் இடித்து நாசமாக்கினர். இதற்கு ஒரு படி மேலாக, சில வீடுகளின் எதிரில் குப்பைத் தொட்டிகளை வைத்தனர். கடலுார் வன்னியர்பாளையம் பள்ளிக்கூடத் தெருவில், ஒரு வீட்டிற்கு நேற்று ஐந்து பெண் ஊழியர்கள், நான்கு ஆண் ஊழியர்கள் கும்பலாக சென்று நிலுவை வரித்தொகையை செலுத்துமாறு கேட்டனர். வீட்டில் இருந்தவர்கள், இந்த மாதத்திற்குள் செலுத்தி விடுவதாகக் கூறியதை கேட்காத மாநகராட்சி பெண் ஊழியர்கள், வாய்க்கு வந்தபடி திட்டி, 'கடப்பாரையால் வீட்டை உடைப்போம்' என மிரட்டினர். இதனால், வீட்டின் உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.மாநகராட்சி ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொள்கின்றனர் என்பதை அறிந்த கவுன்சிலர்கள், கடந்த கூட்டத்தில் நிலுவைத் தொகை வசூலிப்பதாகக் கூறி, யாரிடமும் அத்துமீறக் கூடாது என்று வலியுறுத்திப் பேசினர்.அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், மீண்டும் அடாவடி செய்து வசூல் வேட்டையில் இறங்கி இருப்பது மாநகர மக்களை அச்சமடையச் செய்துள்ளது.