பல் டாக்டர் அலைக்கழிப்பு குடும்பத்துடன் வங்கி முன் தர்ணா
கடலுார்:கடலுார் அடுத்த வி.காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 53. இவர் தன் மகன் முருகனை பல் மருத்துவம் படிக்க வைப்பதற்காக, 2015ம் ஆண்டு மனைவி எழிலரசி, 49, பெயரில் இருந்த வீட்டை கடலுாரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதற்கு வட்டியுடன் சேர்ந்து 21 லட்சத்து 32,000 ரூபாயை, 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் கடன் தொகை முழுவதையும் செலுத்தி முடித்தார். ஆனால், அடமானம் வைத்த வீட்டின் அடமான பத்திரத்தை வழங்காமல், வங்கி நிர்வாகம் அலைக்கழித்து வந்தது. மன உளைச்சலுக்கு ஆளான சுந்தரமூர்த்தி, இதுகுறித்து போலீஸ், எஸ்.பி., அலுவலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.அதிருப்தியடைந்த சுந்தரமூர்த்தி, நேற்று தன் மனைவி மற்றும் பல் டாக்டரான தன் மகனுடனும் காலை 9:30 மணிக்கு, பூட்டியிருந்த வங்கி வாயிலின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து காலை 11:00 மணிக்கு போராட்டத்தை விலக்கினர்.