கடலுார், : லோக்சபா தேர்தலை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். லோக்சபா தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் மனுத் தாக்கல் வரும் 20ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 28ம் தேதி நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 30ம் தேதி கடைசி நாள். ஏப்., 19ம் தேதி ஓட்டுப் பதிவு, ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில், கடலுார், சிதம்பரம் (தனி) என இரு லோக்சபா தொகுதிகள் உள்ளது. கடலுார் லோக்சபா தொகுதியில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சிதம்பரம் லோக்சபா தொகுதியில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), புவனகிரி, அரியலுார் மாவட்டம் அரியலுார், குன்னம், ஜெயங்கொண்டம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக 3 பறக்கும் படை குழுக்கள் என மொத்தம் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த் துறை, இதர துறை அதிகாரிகள், போலீசார் என 5 பேர் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல், மாவட்டம் முழுதும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சிக் கொடி கட்டப்பட்ட வாகனங்களை நிறுத்தி, கொடியை அகற்றுமாறு அறிவுறுத்துகின்றனர். திட்டக்குடியில் நேற்று வாகன சோதனையின் போது, லாரியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 2 லட்சத்து 51 ஆயிரத்து 950 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் ஆன் லைன் மூலமாக நேற்று விண்ணப்பித்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் கட்சிக் கொடிகள், பதாகைகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது. கடலுார் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அபிநயா தலைமையில், தாசி்ல்தார் பலராமன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பழைய கலெக்டர் அலுவலக சாலையில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் பணி நடந்தது.அதே போல், துணை தாசில்தார் ஜெயக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் கடலுார் மஞ்சக்குப்பம் ரவுண்டான அருகே வாகன சோதனை நடத்தினர். புதுச்சத்திரத்தில் பறக்கும்படை எஸ்.எஸ்.டி.ஏ குழு, பறக்கும்படை அலுவலர் உதவி பொறியாளர் பாபுமனோகர் தலைமையில், வாகன சோதனை நடந்தது. சிறப்பு சப். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர்கள் பாலசுப்ரமணியன், தமிழரசன், பாலமுருகன் உடனிருந்தனர்.சிதம்பரம் தொகுதி பறக்கும் படை கண்காணிப்பு அதிகாரி பாபு மனோகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் பு.முட்லுாரில் வாகன சோதனை செய்தனர். நெல்லிக்குப்பம் அருகே தாசில்தார் ஸ்ரீதரன் தலைமையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர்.