நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு; தி.மு.க..-அ.தி.மு.க., தாராளம்
வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வினர் மாவட்டம் வாரியாக தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, தொகுதி வாரியாக பிரசார கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் என, 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வார்டு வாரியாக உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை, அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்களை சேகரித்துள்ளனர். தி.மு.க.,-அ.தி.மு.க., வினர் பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தி, நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், இருகட்சியினரும் முக்கிய நிர்வாகிகளுக்கு பரிசு வழங்க காத்திருக்கின்றனர். அதாவது, வேட்டி, ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசுகளை வழங்க சார்பு அணி நிர்வாகிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். கடந்த தேர்தலை காட்டிலும் வரும் சட்டசப தேர்தலில் கூடுதல் ஓட்டுகளை பெற கட்சித் தலைமை 'கவனிப்பு' செய்வதால் நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.