தீபாவளியால் பிளாஸ்டிக் பயன்பாடு... அதிகரிப்பு; சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்கப்படுமா
விருத்தாசலம் : தீபாவளி பண்டிகையால் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, புத்தாடை, ஸ்வீட் கார வகைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. மாவட்டம் முழுவதும் நகரங்களை நோக்கி பொது மக்கள் படையெடுக்க துவங்கி விட்டனர். இதனால் பெரு நகரங்கள் மட்டுமல்லாது பேரூராட்சிகள் வரை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.பெரும்பாலும் புத்தாடைகள், பட்டாசு, ஸ்வீட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பிளாஸ்டிக் பைககளில் வழங்கப்படுகின்றன. இவற்றில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், அதன் பயன்பாடு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.பொதுவாக தடிமனாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பொருட்களை மீள்சுழற்aசி செய்து, மாற்று பொருட்கள் தயாரிக்கவும், சாலை அமைக்கவும் பயன்படுத்த முடியும். இதனால், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது.அதுபோல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் சூப்பர் மார்க்கெட் உட்பட பெரு வணிக நிறுவனங்களில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தவிர்க்கப்பட்டது.இருப்பினும் ஒரு கிலோவுக்கு குறைவான பொருட்களை விற்பனை செய்ய மெல்லிய மற்றும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவை மண்ணில் மக்காமல் பல ஆண்டுகள் அப்படியே கிடப்பதால் மண்ணின் தன்மை மாசுபடுகிறது என ஆய்வாளர்கள் பலரும் உறுதிபடுத்தியுள்ளனர்.தற்போது தீபாவளி பண்டிகை விற்பனை தீவிரமடைந்துள்ள நிலையில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இவற்றால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.பெருமழை, பேரிடர் காலங்களில் மட்டுமே ஆறு, ஏரிகளில் நீர்ப்பிடிப்பு கிடைக்கும் நிலையில் நீர்வளத்தை பாதிக்கும் பிளாஸ்டிக் பைகளால் பேராபத்து உள்ளது. எனவே, தீபாவளி விற்பனையில் மக்காத பிளாஸ்டிக் பைகள் விற்பனையை தடுக்க வியாபாரிகள் முன்வர வேண்டும்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் செய்து, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.