கடலுார்: கடலுாரில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பஸ் நிலையம் வந்து விடக்கூடாது என்பதற்காக, மருதம் பூங்கா அவசர அவசரமாக அமைக்கப்பட் டு வருகிறது. கடலுார் பஸ் நிலையம், நகரின் மையப் பகுதியில் இயங்கி வருகிறது. மக்கள் தொகையும், பஸ் போக்குவரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பஸ் நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால், பஸ் நிலையத்தை விசாலமான வேறு இடத்திற்கு மாற்றுவது என கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, நகரப் பகுதிக்கு அருகில், கடலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ள 20 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் அமைக்க அப்போதைய அமைச்சர் சம்பத் அடிக்கல் நாட்டினார். பணிகள் துவங்கிய சமயத்தில் சட்டசபை தேர்தல் நடந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க., ஆட்சி அமைந்தது. தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, தனது குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். நகரத்தைவிட்டு 10 கிலோ மீட்டர் துாரத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல், தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., மா.கம்யூ., இ.கம்யூ., ம.தி.மு.க., போன்ற கட்சிகளும், நகர் நல சங்கங்களும் போர்க்கொடி உயர்த்தின. அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இருந்தபோதும், சட்டசபை தேர்தலுக்கு முன், எம்.புதுாரில் பஸ் நிலையத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். எம்.புதுாரில் யாரும் பார்க்காத வகையில் தகரங்களால் மறைப்பு அமைத்து, பஸ் நிலைய கட்டுமான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன் பணிகளை முடிக்க திட்டமிட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடக்க உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், கலெக்டர் அலுவலகம் அருகில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திலேயே பஸ் நிலையத்தை கொண்டு வந்து விடக்கூடாது என்பதற்காக அமைச்சர் பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய இடத்தில் ரூ.10 கோடியில் மருதம் பூங்கா அமைக்க அவசர அவசரமாக பூமி பூஜை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கட்டுமானப் பணிகளை துவக்கும் வகையில், என்.எல்.சி., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்.,) நிதியில் இருந்து கிராவல் மண் கொட்டப்பட்டு வருகிறது. கடலுாரில் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக எத்தனையோ பிரச்னைகள் இருக்க, ரூ.10 கோடியில் அவசர அவசரமாக பூங்கா அமைப்பது தேவைதானா என அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.