சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., வுடன் கூட்டணியா விருதை தி.மு.க., நிர்வாகிகள் ஷாக்
மா வட்டத்தில் அதிக கிராமங்களை உள்ளடக்கியது, விருத்தாலம் சட்டசபை தொகுதி. இத்தொகுதியில், கடந்த 1952ல் டி.டி.பி., கட்சி வேட்பாளர் பரசிவம் வெற்றி பெற்றார். அதன்பின், 1957ல் சுயேட்சை வேட்பாளர் செல்வராசு, 1962, 67ல் காங்., பூவராகன், 1971ல் தி.மு.க., செல்வராசு, 1977ல் அ.தி.மு.க., ராமநாதன், 1980, 84ல் காங்., தியாகராஜன், 1989ல் ஜனதா தளம் பூவராகன், 1991ல் அ.தி.மு.க., அரங்கநாதன் வெற்றி பெற்றார். 1996ல் தி.மு.க., குழந்தை தமிழரசன், 2001ல் பா.ம.க., கோவிந்தசாமி, 2006ல் தே.மு.தி.க., விஜயகாந்த், 2011ல் தே.மு.தி.க., முத்துக்குமார், 2016ல் அ.தி.மு.க., கலைச்செல்வன் ஆகியோர் எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர். கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்ற காங்., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 1996ம் ஆண்டுக்குப் பின், இதுநாள் வரை தி.மு.க., எம்.எல்.ஏ., என யாருமே இல்லை. முந்தைய தேர்தலில் (2016), தொ.மு.ச., நிர்வாகி தங்க ஆனந்தன் அறிவிக்கப்பட்டு, ஸ்டாலின் பிரசார வருகையின் போது, நல்லுார் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மாற்றி அறிவிக்கப்பட்டார். மாற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இருவரும், இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளர் கலைச்செல்வன் வெற்றி பெற்றார். இதனால், கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., நிர்வாகிகள் பலரும் தொகுதியை பெற முட்டி மோதினர். ஸ்டாலின், உதயநிதி மற்றும் மாவட்ட செயலாளர் கணேசன் ஆதரவு என மும்முனை போட்டியில் தொகுதியை பெறும் முயற்சி பலமாக நடந்தது. இந்த குளறுபடியை பயன்படுத்திய அப்போதைய காங்., மாநில தலைவர் அழகிரி, விருத்தாசலம் தொகுதியை தனது ஆதரவாளருக்கு பெற்றார். இருப்பினும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற ஒற்றை இலக்கில், காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணனை வெற்றி பெறச்செய்தனர். கடந்த 2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய விஜயகாந்த், தான் போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.மற்ற 233 தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகளை பெற்றார். இது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்று கட்சி களமிறங்கியதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி மாற்றம், மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியது, அவரது மறைவு என அக்கட்சிக்கு பெரும் சறுக்கலை சந்தித்தது. மேலும், கடந்த 2021 தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா டிபாசிட் இழந்தார். இது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது, தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என பலரும் எதிர்பார்க்கப்படுகின்றனர். அவ்வாறு இணையும் பட்சத்தில் தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம், ரிஷிவந்தியம் என இரு தொகுதிகளும் கட்டாயம் கேட்டுப் பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே, காங்., கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்த நிலையில், தே.மு.தி.க.,வும் நெருக்கடி தரும் என்பதால், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட காத்திருக்கும் தி.மு.க., நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.