உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏரிக்கரையில் இறந்து கிடந்த தி.மு.க., பிரமுகர்; அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலம் குள்ளஞ்சாவடி அருகே 5 பேர் கைது

ஏரிக்கரையில் இறந்து கிடந்த தி.மு.க., பிரமுகர்; அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலம் குள்ளஞ்சாவடி அருகே 5 பேர் கைது

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அருகே ஏரிக்கரையில் இறந்து கிடந்த தி.மு.க., பிரமுகர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே என்.மூலக்குப்பத்தை சேர்ந்தவர் ஞானக்குமார், 52; தி.மு.க., கிளை செயலாளர். இவர், கடந்த 25ம் தேதி, குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம், புது தாங்கல் ஏரி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயப்பிரியா குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.அதில், நடுவீரப்பட்டு, சாத்தன்குப்பம் பகுதியில் தேவநாதன் என்பவர் வயலில், கடந்த 25ம் தேதி நள்ளிரவு ஞானக்குமார் பலாப்பழம் திருட சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, மரத்தில் இருந்த பலாப்பழத்தை பறித்தபோது, வயலுக்கு வந்த தேவநாதன் தட்டிகேட்டு, சவுக்கு கட்டையால் ஞானக்குமாரை தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த ஞானகுமார் இறந்துள்ளார். கொலையை மறைக்க அதே பகுதியை சேர்ந்த அருள் மகன் சூரியபிரகாஷ், 24; தண்டபாணி மகன் தணிகைவேல், 38, ஆனந்தன் மகன் ரவிச்சந்திரன், 52; சர்க்கரை மகன் இளங்கோ, 43; ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார்.அனைவரும் சேர்ந்து உடலை பைக்கில் கொண்டு சென்று, குள்ளஞ் சாவடி, சமட்டிகுப்பம் ஏரி அருகே வீசி சென்றது தெரிய வந்தது. அதையடுத்து, தேவநாதன், சூரியபிரகாஷ், தணிகைவேல், ரவிச்சந்திரன், இளங்கோ ஆகியோரை குள்ளஞ்சாவடி போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த இடம், திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் வருவதால், வழக்கை, அங்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை