உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலாஜா ஏரியை துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை

வாலாஜா ஏரியை துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு: மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் வாலாஜா ஏரியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு திறந்துவிட வேண்டுமென, விவசாயிகள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுாில் துவங்கும் வாலாஜா ஏரி, கரைமேட்டில் உள்ள பரவனாறு வரை 3 கி.மீ., நீளமும், துறிஞ்சிக்கொல்லை, மதுவானைமேடு வரை 5 கி.மீ., அகலமும் கொண்டது. வாலாஜா ஏரியில் இருந்து பின்னலுார், கரைமேடு, தலைக்குளம், அம்பாள்புரம், கிருஷ்ணாபுரம், சாத்தப்பாடி, ஜெயங்கொண்டான், கொளக்குடி, கொத்தவாச்சேரி, நத்தமேடு உள்ளிட்ட பகுதிகளில் 11 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வாலாஜா ஏரி மொத்தம் 1,618 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நெய்வேலி என்.எல்.சி., சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் கரி தண்ணீர் வாலாஜா ஏரிக்கு வந்தடைகிறது. மழைக் காலங்களில் வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. பின், அங்கிருந்து வாலாஜா ஏரியில் நிரப்பப்பட்டு குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரிக்கும் அனுப்பப்படுகிறது. கோடைக்காலங்களில் வீராணம் ஏரி வறண்டு போகும் நிலையில், மெட்ரோ நிறுவனம் வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றில் பம்ப் செய்து சென்னை மக்களின் தேவைக்காக தண்ணீர் அனுப்பி வருகிறது. கடந்த 2013-2014ம் ஆண்டு என்.எல்.சி., நிறுவனம் பரவனாற்றை துார்வாரியது. ஆனால், வாலாஜா ஏரியின் நான்கில் ஒரு பகுதியை மட்டும் துார்வாரி கரையை உயர்த்தி பலப்படுத்தியது. இதனால், ஏரி முழுதும் துார்வாராமல் கருவேல மரங்களும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் சம்புகள் வளர்ந்தும் புதர்மண்டி காணப்படுகிறது. ஏரி முழுதும் கரி தண்ணீரினால் சேறும் சகதியும் மண் துார்ந்து சமதள பரப்பாக மாறியுள்ளதால் அதிகளவு தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கோடைக் காலங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் விவசாயிகள் பாதிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி வாலாஜா ஏரியை துார்வாரி மழைக்காலங்களில் அதிகப்படியான தண்ணீரை தேக்கி கோடைக் காலங்களில் விவசாய பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ