தேர்வு விடுமுறை எதிரொலி: ரயில்களில் கூட்ட நெரிசல்
விருத்தாசலம்: அரையாண்டுத் தேர்வு விடுமுறை, புத்தாண்டு விடுமுறை நாட்களால் தென்மாவட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக டிச., மாதத்தில் புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பது வழக்கம். அதன்படி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் அலுவலர்கள், தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பயணம் செய்கின்றனர். மேலும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிவோரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால், சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி பல்லவன் சூப்பர் பாஸ்ட், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், குருவாயூர், அனந்தபுரி, பொதிகை, முத்துநகர் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் முண்டியடித்தது. வழக்கத்திற்கு மாறாக பொதுப்பயண பெட்டிகளில் நிற்க கூட இடமின்றி, முன்பதிவு பயண பெட்டிகளிலும் பயணிகள் ஏராளமானோர் நின்றபடி பலமணி நேரம் கால்கடுக்க பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், விருத்தாசலம், அரியலுார் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.