பாசன வாய்க்கால் துார் வார விவசாயிகள் கோரிக்கை
சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரியின் பாசன வாய்க்கால்கள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களை துார்வாராததால் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர். சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி லால்பேட்டை வரை 28 நேரடி வாய்க்கால்கள், ஏராளமான கிளைவாய்க்கால்கள் உள்ளன. வீராணம் ஏரி மூலமாக கீரப்பாளையம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி ஆகிய வட்டாரங்களில் 50 ஆயிரம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது கீரப்பாளையம் வட்டாரத்தில் சம்பா நாற்றுவிடும் பணி நடக்கிறது. இதேப் போன்று, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், குமராட்சி ஆகிய வட்டாரங்களில் நேரடி நெல்விதைப்பு செய்து வருகின்றனர். ஏரியின் பாசன வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் துார்வாரப்படாமல் உள்ளன. இதனால், கடைகோடியில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பாசன வாய்க்கால்களை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.