உளுந்து, பச்சை பயிர் விலை கடும் வீழ்ச்சி: மாவட்டத்தில் விவசாயிகள் கவலை
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யாததால், உளுந்து மற்றும் பச்சை பயிர் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி நெல் அறுவடைக்கு பின்னர் நெல் தரிசில் 4 லட்சம் ஏக்கர் பரப்பில் உளுந்து மற்றும் பச்சை பயிர் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.உளுந்து, பச்சை பயிர் ஏப்ரல் மாதத்தில் அறுவடை துவங்கி முடியும் நிலையில் உள்ளது. இந்தாண்டு உளுந்து சாகுபடியில் மஞ்சள் நோய் தாக்கி சாகுபடி பயிர் முற்றிலும் பாதித்தது. கடந்த மாதம் பெய்த திடீர் மழையால் பச்சை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்துள்ளது.இந்நிலையில் உளுந்து, பச்சை பயிர்களை தனியார் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ததால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்தாண்டு இதே நாளில் பச்சை பயிர் குவிண்டால் (100 கிலோ) ரூ.7,700க்கும் உளுந்து குவிண்டால் ரூ.5,650க்கும் விவசாயிகள் விற்பனை செய்தனர். இந்தாண்டு மகசூல் குறைந்துள்ள நிலையில் துவக்கத்தில் பச்சை பயிறு குவிண்டால் 7,600க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வியபாரிகள் படிப்படியாக குறைத்து நேற்றைய நிலவரப்படி ரூ.7,000 முதல் ரூ.7,100 என கொள்முதல் செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம், உளுந்துக்கு கிலோ ரூ.74 வீதம் குவிண்டால் ரூ.7,400க்கும், பச்சைப் பயறுக்கு கிலோ ரூ.86.82 வீதம் குவிண்டால் ரூ.8,682க்கு கொள்முதல் செய்ய விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆதார விலையின் அடிப்படையில் விருத்தாசலம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இது நாள் வரை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து உளுந்து, பச்சை பயிர் கொள்முதல் செய்யவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் வியபாரிகள், விவசாயிகளிடம் இருந்து அரசு நிர்ணயம் செய்துள்ள அடிப்படை விலையை விட குறைத்து அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால், பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தனியார் வியபாரிகள் பச்சை பயிறு கிலோ ரூ.86.82க்கு பதிலாக வெறும் ரூ.70க்கும், உளுந்து ரூ.74க்கு பதிலாக வெறும் ரூ.60க்கும் கொள்முதல் செய்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தனியார் வியாபாரிகள் அரசு நிர்ணய விலையில் கொள்முதல் செய்வதை கண்காணிக்க வேண்டும்.