விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல்
விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிடியில், வேளாண் விளைபொருட்களை எடைபோடாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் நேற்றும் வழக்கம்போல், விவசாயிகள் நெல், எள், மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தினசரி காலை 7:00 மணிக்கு வியாபாரிகள் வந்து எடை போடுவது வழக்கம். ஆனால், நேற்று காலை 9:30 மணி வரை வியாபாரிகள், வேளாண் அதிகாரிகள் வராததால், விளைபொருட்களை எடைபோட முடியாத நிலை ஏற்பட்டது.மேலும், குறிப்பிட்ட காலத்தில் விவசாயிகள் விற்பனை செய்யும் வேளாண் விளைபொருட்களுக்கு பணம் போடாமல் வியாபாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று காலை 9:45 மணியளவில் மார்க்கெட் கமிட்டி எதிரே விருத்தாசலம் - கடலுார் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், விருத்தாசலம் - கடலுார் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேலும், இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.