நெல் வயல்களில் மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள்... கவலை; அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை சாகுபடி நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட வட்டாரங்களில் விவசாயிகள் 30ஆயிரம் ஏக்கருக்கும் மேல் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த வட்டாரங்களில் பெரும்பாலான பகுதிகளில் ஏ.எஸ்.டி.,-16 மோட்டா ரகங்கள் அதிகளில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் அறுவடைக்குத்தயாராக இருந்த நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக நெல்வயல்களில் தண்ணீர் சூழ்ந்து விவசாயிகள் கவலையடைந்தனர். பின் தண்ணீர் வடிந்த நிலையில், கடந்த ஒருவாரமாக ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், கீரப்பாளையம், புவனகிரி வட்டாரங்களில் நெல் அறுவடை பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கீரப்பாளையம் வட்டாரத்தில் பூதங்குடி, பரிபூரணநத்தம், வெள்ளியக்குடி, பரதுார், விளாகம், சேதியூர், ஓடாக்கநல்லுார், மதுராந்தகநல்லுாரிலும், கம்மாபுரம் வட்டாரத்தில் விளக்கப்பாடி, தட்டானோடை, தர்மநல்லுாரிலும், புவனகிரி வட்டாரத்தில் சின்னநற்குணம், பெரியநற்குணம், வீரமுடையாநத்தம், சின்னகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் 1,500 ஏக்கர் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் சாய்ந்துள்ளது. இதனால் அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடந்த 15நாட்களுக்கு முன் பெய்த மழையில் பாதியளவு சேதமடைந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன் அறுவடையை துவக்கினோம். தற்போது மீண்டும் மழை பெய்துள்ளதால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடையும் நிலை உள்ளது. அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதற்கும் போதிய வசதிகள் இல்லாததால் ஈரமாக உள்ளது எனக்கூறி கொள்முதல் செய்ய மாட்டார்கள். வயலிலேயே இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் நெல் முளைத்துவிடும் நிலை உள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.