அக்.,2ல் விடுமுறை அளிக்காத 42 நிறுவனங்களுக்கு அபராதம்
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினமான 2ம் தேதி விடுமுறையின்றி இயங்கிய 42 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ஞானபிரகாசம் (அமலாக்கம்) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய விடுமுறை தினமான நேற்று முன்தினம் 2ம் தேதி கடலுார் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து எனது தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, பணியாளர்கள் பணிபுரிய முன் அனுமதி பெறாத 42 நிறுவனங்கள் (கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள்) இயங்கியது தெரிந்தது. இந்நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களில் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் பணியாளர்களை பணிக்கு அமர்த்தினால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அவ்வாறு பணியமர்த்தினால் உரிய படிவத்தை பூர்த்தி செய்து, விடுமுறை நாளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக சம்மந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.