உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ளாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு தற்காலிக சாலை 4வது முறை துண்டிப்பு இரு மாவட்ட மக்கள் பாதிப்பு  

வெள்ளாற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு தற்காலிக சாலை 4வது முறை துண்டிப்பு இரு மாவட்ட மக்கள் பாதிப்பு  

பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே திடீர் வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக செம்மண் சாலை 4வது முறையாக துண்டிக்கப்பட்டதால் இரு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம்-, அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை உள்ளது. இதன் வழியாக அரியலுார் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், தெத்தேரி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இதே போன்று, பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், மாளிகைக்கோட்டம், அரியராவி, நந்திமங்கலம், வடகரை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம், அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். ஆண்டுதோறும் மழை காலங்களில் இரு மாவட்டங்களை இணைக்கும் இந்த தற்காலிக செம்மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்வதும், பின்னர் சாலை அமைத்து பயன்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் மழை காலங்களில் கடலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு 10 கி.மீ., துாரம் சுற்றி முருகன்குடி மேம்பாலம் வழியாகவும், 15 கி.மீ., துாரமுள்ள பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாகவும் பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலுார் பகுதிகளுக்கு செல்வதால் சிர மத்திற்கு ஆளாகினர். பாதிப்பை தவிர்க்க கடந்த 2018ல் அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு வெள்ளாற்றின் குறுக்கே 10 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் இருபுறமும் கிராமங்களை இணைக்கும் சாலை பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. கடந்த சில நாட்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆணைவாரி மற்றும் உப்பு ஆகிய ஓடைகளின் வழியே பாய்ந்த மழைநீரால் நேற்று வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், தற்காலிக செம்மண் சாலை 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 19ம் தேதி, ஜூன் 11, ஆக., 13 ஆகிய தேதிகளில் செம்மண் சாலை துண்டிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக செம்மண் சாலை துண்டிக்கப்பட்டதால் இரு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இணைப்பு சாலை பணியை, விரைந்து முடிக்க இரு மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை