கடலுார் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடலுார் : சாத்தனுார் அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு: சாத்துனுார் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவான 7321 மில்லியன் கனஅடியில் தற்போது 6,263 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டமான 119 அடியில் தற்போது 114.15 அடியாக நீர்மட்டம் உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக சாத்தனுார் அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை பொருத்தும், சாத்தனுார் அணைக்கு மேலே உள்ள அணைகளில் திறக்கப்படும் உபரிநீரின் அளவை பொருத்தும், சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும். இதன் காரணமாக கட லுார் மாவட்டத்தில் பெண்ணையாற்றின் இருகரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்க கூடாது. குளிக்கவும், துணி துவைக்கவும் ஆற்றில் இறங்க கூடாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்க கூடாது. இளைஞர்கள் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கக் கூடாது. கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு துறை சார்ந்த அலுவலர்கள் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீ ர் குறித்த தகவலை கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.