வாகனங்களில் சிக்கி பலியாகும் விலங்குகள் கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை தேவை
விருத்தாசலம் கோட்ட வனத்துறையின் கீழ் கார்மாங்குடி காப்புக்காடு, கட்டியநல்லுார் காப்பு நிலங்கள் உள்ளன. இங்கு மான், மயில், முயல், குரங்கு, மர நாய், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றன. இவற்றுக்கு காடுகளில் குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு காரணமாக குடியிருப்புகளுக்குள் படையெடுப்பது தொடர்கிறது. மேலும், விளைநிலங்களுக்குள் நுழைந்து தானியங்களை தின்றும், அழித்தும் நாசம் செய்கின்றன. மேலும், குடியிருப்புகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதால் பொது மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இதனால் நகர பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், விருத்தாசலம் புறவழிச்சாலையில் இருந்து கருவேப்பிலங்குறிச்சி கூட்ரோடு இடையே 4 கி.மீ., தொலைவிற்கு காப்புக்காடு செல்கிறது. இவ்வழியாக திட்டக்குடி, திருச்சி, ஜெயங்கொண்டம், அரியலுார், கும்பகோணம் மார்க்கமாக நுாற்றுக் கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அப்போது, வாகன ஓட்டிகள் பொறி, பழங்கள், வீணான உணவுகளை சாலையோரம் வீசிச் செல்கின்றனர். இவற்றை சாப்பிடுவதற்காக சாலையின் இருபுறமும் காத்திருக்கும் குரங்குகள், உணவுக்காக கடக்கும்போது வாகனங்களில் சிக்கி பலியாவது தொடர்கிறது. அதுபோல், நேற்று காலை 8:30 மணியளவில், சாலையை கடந்த குட்டி உட்பட மூன்று குரங்குகள் கார் மோதி பரிதாபமாக பலியாகின. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவற்றை சாலையை விட்டு அப்புறப்படுத்திச் சென்றனர். எனவே, காப்புக்காடு வழியாக நெடுஞ்சாலை செல்வதால், வன விலங்குகள் கடக்கும் பகுதி என எச்சரிக்கை பலகைகள் வைத்தும், வேகத்தடைகள் அமைத்தும் விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும். கூண்டில் சிக்கிய 87 குரங்குகள் விருத்தாசலம் வனச்சரகர் பசுபதி, வனவர் விஜயகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் சென்று, சேலம் புறவழிச்சாலையில் சுற்றித்திரிந்த 47 குரங்குகளை கூண்டு வைத்து பாதுகாப்பாக பிடித்து, கார்மாங்குடி காப்புக்காட்டில் விட்டனர். அதுபோல், மந்தாரக்குப்பம் அடுத்த தொப்பிலிகுப்பம் கிராமத்தில் 40 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, காட்டுமயிலுார் காப்பு நிலத்தில் விட்டனர்.