உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

 அடிக்கடி பழுதாகும் அரசு பஸ்: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

கடலுார்: கடலுாரிலிருந்து ரெட்டியார்பேட்டை வரை செல்லும் அரசு பஸ் அடிக்கடி பழுதடைவதால், அதை மாற்றி தரக்கோரி பொதுமக்கள் கடலுார் போக்குவரத்து பணிமனை முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலுாரிலிருந்து ஆலப்பாக்கம், ரெட்டியார்பேட்டை வரை செல்லும் அரசு பஸ் மூலம் தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் பயணம் செய்து வந்தனர். அந்த பஸ் அடிக்கடி பழுதடைந்து விடுவதும், மழைக்காலங்களில் பஸ்சிற்கு உள்ளேயே மழைநீர் ஒழுகும் அளவிற்கு சேதமடைந்தும் இருந்தது. அதனால் அதை மாற்றிவிட்டு புதிய பஸ் விடக்கோரி, பொதுமக்கள் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் கடந்த 10ம் தேதி, ரெட்டியார்பேட்டைக்கு வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய பணிமனை அதிகாரிகள் ஒருவாரத்திற்குள் புதிய பஸ் இயக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போக்குவரத்து பணிமனை முன்பு, ரெட்டியார்பேட்டை பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர் . தாசில்தார் மகேஷ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பஸ் எப்போது இயக்கப்படும் என உறுதி வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் காலை, 10:30 மணிக்கு போக்குவரத்து பணிமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானக்கூட்டம் நடத்தி எப்போது புதிய பஸ் இயக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என்றனர். அதையேற்று 11:00 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !