குப்பை எரிந்து கேபிள் சேதம்; விருதை பாலத்தில் பரபரப்பு
விருத்தாசலம்; விருத்தாசலம் மணிமுக்தாறு பாலத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் எரிந்து கேபிள்கள் நாசமானதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கடைவீதியை இணைக்கும் மணிமுக்தாறு மேம்பால நடைபாதையை ஆக்கிரமித்து விவசாயிகள், வியாபாரிகள் காய்கறி, மக்காச்சோளம், கிழங்கு, பழங்கள், கீரைகளை விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் பொங்கல் விழாவின்போது கரும்பு, மஞ்சள் கொத்துகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் கழிவுகள் ஆற்றில் வீசப்பட்டன.அதுபோல், பாலத்தை ஒட்டிய வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பாலத்தை ஒட்டி வீசப்பட்டன. குவிந்து கிடக்கும் குப்பைகள் அவ்வப்போது மர்ம நபர்கள் தீயிட்டு எரிக்கும்போது புகை மண்டலமாக காட்சியளிக்கும். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.அதுபோல், நேற்று காலை மர்மமான முறையில் குப்பைகள் எரிந்து, பாலத்தின் துாண் வழியாக சென்ற கேபிள்களும் சேர்ந்து எரிந்தன. தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் சென்று, தீயை அணைத்தனர். இதனால் பி.எஸ்.என்.எல்., பைபர் நெட், ஜியோ, கேபிள் நெட்வொர்க் ஒயர்கள் தீயில் கருகி சேதமடைந்தன.எனவே, பாலத்தின் கரைகளில் குப்பைகளை வீசும் நபர்களை கண்டறிந்து தண்டிப்பதுடன், அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.