அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல் லுாரி மாணவர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கீழ வன்னியூர், எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில், போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் குமராட்சியில் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு முதல்வர் மீனா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் செஞ்சிலுவை சங்க அமைப்பு ஆகிய பிரிவு மாணவர்கள் விழிப்புணர்வு அட்டைகளை கையில் ஏந்தியவாறு போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் தீய விளைவுகள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கல்லுாரி மாணவர்களின் இந்த விழிப்புணர்வு ஊர்வலம், குமராட்சி கடைவீதி வழியாக சென்று, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ-மாணவியர், குமராட்சி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.