எஸ்.டி., ஜாதி சான்றிதழ் வழங்குவதில் வழிகாட்டுதல் ஆலோசனை கூட்டம்
சிதம்பரம்: எந்த மதத்தை பின்பற்றினாலும் பழங்குடியின சமூக மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானுடவியல் வல்லுனர் பாண்டியராஜ் பேசினார்.பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்து வழிகாட்டுதல் மற்றும் தெளிவுரைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்ககைழகத்தில் நடந்தது. இதில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணன் தாலுக்காவிற்குட்பட்ட வி.ஏ.ஓ., க்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் ஏற்பாட்டில் நடந்த, கூட்டத்திற்கு கலால் உதவி ஆணையர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். சிதம்பரம் தாசில்தார் கீதா, சமூகநலத்துறை தாசில்தார் ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர்.சென்னை தலைமை செயலக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானுடவியல் வல்லுனர், பாண்டியராஜ் பேசுகையில், பழங்குடியினரும் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. பழங்குடியின மக்களுக்கான முதல் கணக்கெடுப்பு 1950 ல் துவங்கியது. 2023 ம் ஆண்டுக்கு முன்பு வரை மொத்தம் 36 பழங்குடியின பிரிவுகள் இருந்தது. 2023 ல், 37 வது பிரிவாக நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் இனம் சேர்க்கப்பட்டது. இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இன்றும் தொடர்ந்து வருகிறது. முதலில் தாசில்தார் மூலமாக வழங்கப்பட்ட பழங்குடியின சான்று, பின்னர் 1983 க்கு பின்பு ஆர்.டி.ஓ., அல்லது சப் கலெக்டர் மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டது. பழங்குடியினர் எந்த மதத்தை பின்பற்றிலுாம், அவரது பூர்வக்குடியை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். என்பது சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்து கூறினார். அவர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பாண்டியராஜ் பேசினார். தொர்ந்து வி.ஏ.ஓ.,க்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். நிகழ்வில் துணை தாசில்தார்கள் சுரேஷ், சங்கர், சந்திரேசகர், பழனி மற்றும் 250 க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.