செப்டம்பரில் பெய்த தென்மேற்கு பருவ மழை குறைந்தது: கடலுார் மாவட்டத்தில் விவசாயிகள் ஏமாற்றம்
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 10 ஆண்டுகளின் சராசரி மழையளவை விட இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெய்த தென்மேற்கு பருவ மழையளவு குறைந்ததால், பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரையில் பெய்யும். இப்பகுதியில் அதிகப்படியாக பெய்யும் மழையால், தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தென்மேற்கு பருவ காற்று வாபஸ் பெற்ற பிறகுதான் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவது வழக்கம். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். கடலுார் மாவட்டத்தில், 10 ஆண்டு சராசரி மழையளவு 1200 மி.மீட்டர் ஆகும். அதில் வடகிழக்கு காற்றின் மூலம் நமக்கு 790 மி,மீ., மழை கிடைக்கிறது.தென்மேற்கு பருவ காற்றின் இந்த ஆண்டு ஜூன் மாதம் 47.3 மி.மீட்டருக்கு 125.60, ஜூலையில் 75.10 மி.மீட்டருக்கு 56.10, ஆகஸ்ட் மாதத்தில் 129.20 மி.மீட்டருக்கு, 185.90, செப்டம்பரில் 131.50 மி.மீட்டருக்கு, 47.50 மழை பெய்துள்ளது.கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 383.20 மி.மீட்டர் பெய்ய வேண்டிய மழையில், 415.10 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இயல்பை விட கூடுதலாகவும், செப்டம்பரில் கிடைக்க கூடிய மழையளவில் 131.50 மி.மீட்டருக்கு 47.50 மட்டுமே பெய்துள்ளது.அடிக்கடி மழை பெய்யக்கூடிய செப்டம்பரில், வழக்கத்திற்கு மாறாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தால் மக்கள் அவதிப்பட்டனர்.தென்மேற்கு பருவமழை பெய்ததில் மொத்தத்தில் பதிவான மழையவு இலக்கை விட கூடுதலாக இருந்தாலும், செப்டம்பர் மாதம் பெய்த மழையளவு இயல்பான மழையளவில், மூன்றில் ஒரு பங்காக உள்ளது.கர்நாடகா மாநிலம் நந்திதுர்கா என்கிற இடத்தில் இருந்து தென்பெண்ணையாறு உருவாகி வருகிறது. இப்பகுதியில் அதிகப்படியாக பெய்யும் மழையளவு கெலவரப்பள்ளி, தர்மபுரி, சாத்தனுார் வழியாக தென்பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, கடலுார் அருகே உள்ள வங்கக்கடலில் கலக்கும்.இந்த ஆண்டு இதுவரை பெண்ணையாற்றில் சிறிதளவு கூட தண்ணீர் வரவில்லை. இதனால் ஆற்றுப்படுகையில் உள்ள கிராமங்களில் நிலத்தடிநீர்மட்டம் உயரவில்லை. இதனால், மழையை எதிர்பார்த்த விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தற்போது வடகிழக்குப்பருவ மழை விரைவில் துவங்க உள்ள நிலையில், இந்த மழையாவது ஏமாற்றாமல் பெய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.