சிதம்பரம்: சிதம்பரம் அருகே அண்ணன் மனைவியின் தலையை துண்டித்து, கொடூரமாக கொலை செய்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே காட்டுக்கூடலுார், குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழரசி, 35; இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன்,13; ஹரிசக்தி, 10; என்ற இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் கோபாலகிருஷ்ணன் வசித்து வருகிறார். மனைவி தமிழரசி, தனது இரு மகன்களுடன், அதே கிராமத்தில், வேறு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கணவர் கோபாலகிருஷ்ணனின் தம்பிகளான பாலகிருஷ்ணன், முருகானந்தம் இருவரும், தனதுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதாக, சிதம்பரம் தாலுகா போலீசில் தமிழரசி புகார் அளித்தார். அதன்பேரில், இருவர் மீதும், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, முருகானந்தத்தை கைது செய்தனர். ஆனால் பாலகிருஷ்ணன், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். இந்நிலையில், முன் ஜாமின் பெற்ற பாலகிருஷ்ணன், நேற்று மாலை தமிழரசி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, போலீசில் புகார் கொடுத்தது தொடர்பாக கேட்டு தாக்கியுள்ளார். ஆத்திரம் தீராத பாலகிருஷ்ணன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழரசியின் கழுத்தை அறுத்து தனியாக துண்டித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட தமிழரசி உடல் மற்றும் துண்டிக்கப்பட்ட தலை ஆகியவற்றை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி., ஜெயக்குமார், சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.