ரூ.7.50 கோடி திமிங்கல எச்சம் கடத்தியவர் கைது
சிதம்பரம்:சிதம்பரத்தில், 7.50 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல எச்சத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரத்திற்கு திமிங்கல எச்சம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் படி, நகர போலீசார், சிதம்பரம், தச்சன்குளத்தில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 7 கிலோ 600 கிராம் திமிங்கல எச்சம் பதுக்கி வைத்தது தெரிந்தது. கார் டிரைவர் மயிலாடு துறை மாவட்டம், திரு விழந்துார், புதுதெரு ராஜி, 28, என்பதும், திமிங்கல எச்சத்தை வாசனை திரவியம் தயாரிப்புக்கு விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரிந்தது. ராஜியை கைது செய்த போலீசார், 7.50 கோடி ரூபாய் மதிப்பிலான எச்சம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.