உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் -- சேலம் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பூஜைகள் வேப்பூர் அருகே வாகன ஓட்டிகள் அச்சம்

கடலுார் -- சேலம் சாலையில் நள்ளிரவு நேரத்தில் பூஜைகள் வேப்பூர் அருகே வாகன ஓட்டிகள் அச்சம்

வேப்பூர்: வேப்பூர் அருகே வனப்பகுதி சாலையில் நள்ளிரவில் மர்ம பூஜை அருங்கேறுவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடலுார் - சின்னசேலம் கூட்டுரோடு வரை 111கி.மீ., துாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதன் வழியே சிதம்பரம், விருத்தாசலம், ஆத்துார் , சேலம் பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடலுார் துறைமுகத்திலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இதன் வழியாக செல்கின்றன. இந்த சாலையில், வேப்பூர் அடுத்த பெரியநெசலுாரில் விவசாய நிலங்களும், காப்புகாடு இணையும் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையில் வாரத்திற்கு 3 முறை நள்ளிரவில் மர்ம நபர்கள் பூசணிக்காயை வெட்டி, மஞ்சள், குங்குமம் துாவி, துணிகளை வைத்து, சேவலை பலி கொடுத்து பூஜை செய்து வருகின்றனர். அதனை சாலையிலேயே போட்டுவிட்டு செல்வதால், இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள விளை நிலங்களுக்கு வந்து செல்லும் பெண்கள், இரவு நேரங்களில் காவலுக்கு வரும் விவசாயிகள் பீதியடைகின்றனர். கடலூர் - சேலம் சாலையில் இரவு ரோந்து போலீசார் இல்லாததால், மர்ம நபர்கள் சாலையில் பூஜை செய்வது, காப்புகாட்டிற்குள் சென்று வன விலங்குகளை வேட்டையாடுவது என தொடர்ந்து நடக்கிறது. எனவே, வேப்பூர் காப்புக்காடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நடக்கும் மர்ம பூஜைகளை தடுக்கவும், காப்புகாட்டிற்குள் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கவும், ரோந்து போலீசார் நியமித்து பணியில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ