உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மளிகை கடையில் நுாதன திருட்டு வியாபாரிகள் கடும் அச்சம்

மளிகை கடையில் நுாதன திருட்டு வியாபாரிகள் கடும் அச்சம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நுாதன முறையில் பொருட்களை திருடிச் சென்ற சம்பவத்தால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த மடவிளாக தெருவில் வி.கே.சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு, கடந்த 9ம் தேதி 25 வயது டிப் டாப் ஆசாமி ஒருவர் வந்தார். கடை மேனேஜர் ராஜாவிடம், தன்னை அருகில் உள்ள பால்கடை உரிமையாளர் மகன் என அறிமுகம் செயது கொண்டார். பின், வீட்டு விசேஷத்திற்கு 5 பாக்ஸ் சமையல் எண்ணெய் வேண்டும் எனவும், மளிகை பொருட்கள் அடங்கிய லிஸ்ட்டை மறந்து வீட்டில் வைத்து விட்டதாகவும் கூறினார். இதனை நம்பி மேனேஜர் ராஜா, 30 லிட்டர் சமையல் எண்ணெய்யை பாக்ஸில் கட்டி கொடுத்தார். எண்ணெய் வாங்கி சென்ற மர்ம நபர் வெகுநேரமாகியும் கடைக்கு மீண்டும் வரவில்லை. சந்தேகமடைந்த ராஜா, அருகில் உள்ள பால் கடையில் விசாரித்த போது, கடைகாரர் யார் எனத் தெரியாது கூறினார். ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜா, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். மர்ம நபர்களை போலீசார் கண்டறிய வேண்டுமென, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !