போலீசாரின் வாக்கிடாக்கியை ஆற்றில் வீசியோருக்கு வலை
சேத்தியாத்தோப்பு,:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே, ஒரத்துார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டுகள் ரமேஷ், ரகோத்தமன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பைக்கில் ரோந்து சென்றனர். கிளியனுார் காலனியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆனந்த், 40, அறிவழகன் மகன் அபினேஷ், 26, ஆகியோர் வெள்ளாறு கோணாற்று மதகுக்கட்டையில் அமர்ந்து, மது அருந்திக் கொண்டிருந்தனர்.அவர்களிடம் போலீசார், 'நள்ளிரவில் இங்கு அமர்ந்து மது குடிக்கக் கூடாது; வீட்டிற்கு செல்லுங்கள்' என கூறினர். போதையில் இருந்த இருவரும், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த வாக்கிடாக்கி கருவியைப் பறித்து, வெள்ளாற்றில் வீசிவிட்டு, தப்பியோடி விட்டனர்.போலீசார் இருவரும், வெள்ளாற்றில் வாக்கி டாக்கியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று வரை கிடைக்கவில்லை. ஒரத்துார் போலீசார், ஆனந்த், அபினேஷை தேடி வருகின்றனர்.