ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.5கோடியில் புதிய கட்டடம்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. நடுவீரப்பட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என தினமலர் நாளிதழில் பல முறை செய்திகள் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலி காரணமாக 15 வது நிதிக்குழு மான்ய நிதியில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவிலான புதிய கட்டடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது. விழாவிற்கு கடலுார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தாதேவி, பி.டி.ஓ.,பாண்டியன், சக்தி, உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பி.டி.ஓ.,அலுவலக பொறியாளர் தமிம்முனிஷா, கிராம சுகாதார செவிலியர் சங்க தலைவர் மணிமேகலை, சுகாதார நிலைய கண்காணிப்பாளர் சச்சிதானந்தம், ஆய்வக நுட்புனர் விஜயகுமார், பணி மேற்பார்வையாளர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.