கடலுார்: கடலுார் அருகே கேப்பர் மலையில் உள்ள எம்.புதுாரில், புதிய பஸ் நிலையப்பணி கட்டுமானப்பணி, இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கடலுார் நகரம், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளதால் சராசரியாக தினமும் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்திற்குள் நாளொன்றுக்கு, 650 பஸ்கள் வருகின்றன. பஸ் நிலையம் அருகே வணிக நிறுவனங்கள், ரயில் நிலையம் அருகருகே அமைந்திருப்பதால் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் கடினமாகவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ் நிலையம் கலெக்டர் அலுவலகம் அருகே, 20 ஏக்கரில் அமைக்க முன்னாள் அமைச்சர் சம்பத் பூமி பூஜை போட்டார். அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக கேப்பர் மலையில் உள்ள எம்.புதுாரில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் (குறிஞ்சிப்பாடி தொகுதி) அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதையறிந்த ஆளுங்கட்சியோடு உள்ள கூட்டணி கட்சிகளான, மா.கம்யூ., இ.கம்யூ., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, மற்றும் நகர்நலச்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதனால் பஸ் நிலையப்பணி துவங்குவதும், நிறுத்துவதுமாக இருந்தன. தற்போது சட்டசபை தேர்தல் வர உள்ளதையொட்டி பஸ் நிலையத்தை முடித்தே ஆக வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் அரும்பாடுபட்டு வருகிறார். அதற்காக பஸ் நிலையம் அமைய உள்ள இடம் முழுவதும் தகரங்களால் வெளியில் இருந்து யாரும் பார்க்காத வகையில் வேலி அமைத்து உள்ளே பொதுமக்களுக்கு தெரியாமல் பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 75 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்குள் பஸ் நிலைய கட்டுமானப்பணியை முடிக்க வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கூட மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு பஸ் நிலையத்தை கொண்டு வந்து விடக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் மருதம் பூங்கா துவக்க விழாவும் நடந்து கட்டுமானப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதனால், கடலுார் பஸ் நிலையத்தை நகரின் மையத்திற்கு கொண்டு வரும் வாய்ப்பும் பறிபோய்விட்டது என எதிரணியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அ.தி.மு.க., நிர்வாகி மாதவன் கூறியதாவது: அரசு அலுவலகங்கள் உள்ள இடத்தில் தான், பஸ் நிலையம் இருக்க வேண்டும். ஒதுக்குப்புறமான இடத்தில் அமைவதால் பெண்கள் எப்படி பஸ் நிலையம் செல்ல முடியும். நகரத்திற்கு வெளியே இருண்ட சாலை தான் உள்ளது. சாதாரணமாக லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாதையில் இரவு நேரத்தில் நடந்து செல்லும் பெண்களிடமே செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பாதுகாப்பு இல்லாத ஒரு இடத்தில் பஸ் நிலையத்தை அமைத்தால் எப்படி பெண்களால் செல்ல முடியும். இதற்காக தனியாக ஆட்டோ செலவழிக்க முடியுமா. இவையெல்லாம் அரசுக்கு தெரியவேண்டாமா. பொதுமக்கள், விரும்பாத இடத்தில் பஸ் நிலையம் அமைவது அப்பகுதியில் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் சாதகம். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, பா.ஜ., மாநில மகளிரணி நிர்வாகி சுபஸ்ரீ தவபாலன் கூறுகையில், 'கடலுார் பஸ் நிலையம், நகரின் மையப்பகுதியில் அமைய வேண்டும். தற்போது பஸ் நிலையம் கட்டப்படும் இடம், மருத்துவ பயன்பாட்டிற்காக இப்பகுதி மக்களால் வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ள இடத்தில் பஸ் நிலையம் அமைவது மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது. போலீஸ் குடியிருப்பிலேயே கொலை நடக்கும் தற்போதைய ஆட்சியில் பாதுகாப்பற்ற இடத்தில் பஸ் நிலையம் அமைவது சரியல்ல' என்றார்.