ரூ. 1.25 லட்சம் கோடி முதலீட்டில் புதிய திட்டங்கள் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்
நெய்வேலி: நெய்வேலியில் 79வது சுதந்திர தின விழா நடந்தது. என்.எல்.சி., மனிதவளத் துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் தலைமை தாங்கினார். சுரங்கத்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், மின் துறை இயக்குநர் வெங்கடாசலம், நிதித்துறை இயக்குநர் சரத்குமார் ஆச்சார்யா, என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தேசிய கொடியேற்றி வைத்து மாற்றுத்திறனாளி தொழிலாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: தேசத்தின் முன்னேற்றத்தில் என்.எல்.சி., முக்கிய பங்கு வகிப்பதில் பெருமை கொள்கிறது. புதுப் பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்காக பல மாநில அரசுகளுடன் சேர்ந்து பல கூட்டு நிறு வனங்களை துவங்கியுள்ளது . இத்திட்டங்கள், 2030ம் ஆண்டிற்கான நிறுவனத்தின் இலக்குகளான அனல் மற்றும் சுரங்க உற்பத்தித் திறனை இருமடங்காகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை பன்மடங்காகவும் அதிகரிப்பதற்கு உறுதியான அடித்தளமாகும். நடப்பு நிதி ஆண்டின் (2025-26) முதல் காலாண்டில், ஒட்டுமொத்தமாக 38.81 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி, தலபிரா நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 37.88 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி மற்றும் 6,609.40 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி போன்ற சாதனைகள் மூலம் நிறுவனத்தின் நிதி நிலைமை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2030ம் ஆண்டுக்குள் மின் உற்பத்தித் திறனை 6.7 ஜிகாவாட்டில் இருந்து 20 ஜிகாவாட்டாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேலும் உயர்த்தவும், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தை என்.எல்.சி., அறிவித்துள்ளது. 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் வரலாறு எழுதப்படும்போது, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.