| ADDED : டிச 04, 2025 05:19 AM
நெய்வேலி டிச. 4-: சர்வதேச நடை கால்பந்து போட்டியில் நெய்வேலி வீரர் அசத்தினார். இந்தோனேசியா, பாலியில், 3வது ஆசிய பசிபிக் கோப்பைக்கான நடை கால்பந்து போட்டி கடந்த நவம்பரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் 50 முதல் 60 வயதிற்குட்பட்ட பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெற்றன. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஆண்கள் பிரிவில், 9 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில், போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் வென்றது. சிங்கப்பூர் அணி இரண்டாம் இடம் பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த கென்னடி 2 கோல்களும் நெய்வேலியை சேர்ந்த பெரியநாயகசாமி ஒரு கோலும் அடித்தனர். இதுகுறித்து பயிற்சியாளர் ஞானப்பிரகாசம் கூறியதாவது: இந்த நடை கால்பந்தாட்ட போட்டி, இந்த ஆண்டிலிருந்து இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு அனைத்து மாநிலத்திலும், தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் நடக்க உள்ளது. இதன் பயனை மூத்த விளையாட்டு வீரர்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் குழு அமைத்து இப்போட்டியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் 2026 மே., 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை நடை கால்பந்து போட்டியில், இந்திய அணி பங்கு பெறும். அதற்கான பயிற்சி முறைகளும் விளையாட்டு வீரர்கள் தேர்வு முறைகளும் இம் மாதம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.